Sunday, 5 July 2020

மேலவளவு - கூட்டு பண்ணையம் - திருந்திய நெல் சாகுபடி 2019 #Melavalavu-collective-farming-SRI-paddy-cultivation#


அரசின் உதவியுடன்  விதை முதல் விற்பனை  வரை

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கீழ் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பட்டு வருகிறது.

200 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடிக்காக
  • கூட்டாக வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில்  விதை வாங்கி
  • கூட்டாக பாய் நாற்றங்கால் அமைத்து
  • கூட்டாக சாகுபடி குறித்த வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வயல்வெளி பயிற்சி 
  • கூட்டாக நடவு இயந்திரம்  மூலம் நடவு செய்து
  • கூட்டாக கோனோ வீடேர் வாங்கி களை எடுத்து
  •  கூட்டாக வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து
  • கூட்டாக  அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டது

தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் சாதாரண நடவில் அதிக தண்ணீர் தேவை, அதிக விதை, அதிக நாற்றங்கால் அளவு, பராமரிப்பு செலவு, நாற்று எடுத்தல், நடவு செலவு என உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது.

வரிசை நடவு இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடியில் ஆட்களின் தேவை மற்றும் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது.

மேலும்  கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் கூட்டாக விதை,  நாற்றங்கால், இடுபொருட்கள் வாங்குவதால் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது.          

மேலும் திருந்திய நெல் சாகுபடி மூலம் களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால் ஆட்செலவு குறைவு,பாசன நீர்த் தேவை 40 - 50 சதவீதம் குறைவு, அதிக வேர் வளர்ச்சி, அதிக கதிர்கள், அதிக மணிகள், அதிக தானிய மற்றும் வைக்கோல் மகசூல், எளிதான பூச்சி மேலாண்மை என பல நன்மைகள் உள்ளன.


திருந்திய நெல் சாகுபடி சம்பந்தமாக விவசாயிகளுக்கு பல கட்டங்களாக வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது  

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவின் நோக்கம் விவசாயிகளிடையே தற்போதைய நடைமுறையில் உள்ள அடர்  நடவு முறைக்கும் திருந்திய நெல் சாகுபடி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை சுய பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு வரும் காலங்களில் எது அவர்களுக்கு சரியானது என்பதை அவர்களே முடிவு செய்து வரும் காலங்களில் விவசாயிகள் பயில் செய்து  அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதே குழுவின் நோக்கமாகும்


பாய்  நாற்றங்கால் பணி


திருந்திய நெல் சாகுபடிக்கான பாய்  நாற்றங்கால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே கொட்டாம்பட்டி  வேளாண்மை உதவி இயக்குநர் திரு மதுரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேளாண் அலுவலர் திரு பாலசுப்ரமணியன், வயலக வானொலி கொட்டாம்பட்டி அமுதா ராணி, கவிதா,   பிரிய தர்ஷினி உடனிருந்தார்.  





அதிக மகசூல் மற்றும் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு கூட்டாக வேளாண்மைத் துறை டெப்போவிலிருந்து NLR  விதைவாங்கி பாய்  நாற்றங்கால்  அமைக்கப்பட்டது.

வயல்வெளி பயிற்சி

விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு  சம்பந்தமாக விவசாயிகளுக்கு வயல் வெளி பயிற்சி  வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டது 





வேளாண்மைத் துறை செயல் விளக்க திடலின் வெற்றி


கூட்டு சாகுபடி நோக்கத்திற்க்காக கடந்த ஜூன் மாதம் 2019 திருந்திய நெல் சாகுபடிக்காக எந்திரம் நடவுக்கு பாய் நாற்றங்கால் பயிற்சி  மற்றும் செயல் விளக்க திடல் திரு தெய்வேந்திரன் அவர்கள் வயலில் வேளாண்மைத் துறை  மூலம் அமைத்து குழு விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு தற்போது அதிகமாக விவாசியிகள்  திருந்திய நெல் செய்ய முன்வந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 



திருந்திய நெல் சாகுபடி நடவு



ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

களைகளினால் நெல் பயிரில் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. களைகள் பயிர்களோடு போட்டியிட்டு, பயிருக்குண்டான சத்துகள், நீர், சூரிய ஒளி, நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து பயிர் மகசூலைக் குறைக்கின்றன. களைகளினால் நடவு நெல், நேரடி நெல் விதைப்பு, மானாவாரி நெல் சாகுபடி முறைகளில் முறையே 34 முதல் 67 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


தட்பவெப்ப நிலை, மண்ணின் வகை, நெல் பயிரிடும் முறை, வகைகளின் குணம், ரகம், நீர் மேம்பாடு முறைகள் போன்ற காரணிகளினால் நெற்பயிரில் களைகளின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும்போது நெல் வயலில் புல் வகை களைகளான வர்சனாம் புல், குதிரை வாலி, இஞ்சி புல், கோரை வகை களைகளான வட்டக்கோரை, ஊசிக்கோரை, அகன்ற இலை களைகளான நீர்மேல் நெருப்பு, நீர்முள்ளி, வல்லாரை, நீர்ப்புள்ளி, நீர் கிராம்பு, அரைகீரை, நீர்த்தாமரை, பொடுதழை, கொடகுசால், கொட்டகரந்தி ஆகியவை நெல் பயிரில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சாகுபடி செய்யும் பயிர்களைக் காட்டிலும் விரைவாக வளர்வதற்கும், பரவுவதற்கும் களைகள் சிறப்புத் தன்மைகள் பெற்றுள்ளன. களைகளை அழிப்பது, ஒழிப்பது என்பது முடியாத செயலாகும். நல்ல மகசூல் பெற நடவு நெல் வயலில் நடவுசெய்த 30-ஆம் நாள் வரையிலும் களைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். 

களை நிர்வாகம் சம்பந்தமாக விவசாயிகளுக்கு வயல் வெளியில் செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும் விவசாயிகளின் களை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விவசாயிகளுக்கு சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கப்பட்டது


கோனோ  வீடர் 

களைகளைக் கட்டுப்படுத்த, களை எடுக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதால், கைக் களை எடுக்கும் செலவைக் காட்டிலும் குறைந்த செலவில் களைகளைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்க முடியும். இக் களைக் கருவிகளை நடவு நெல் விதைப்பு செய்த வயலில் வரிசைக்கு வரிசை இடைவெளியில் முன்னும், பின்னும் நகர்த்தி இயக்குவதால், களைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு, அதிக தூர்களும், கதிர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இக் களை கருவி வரிசையிலுள்ள களைகளை மட்டுமே (70-75 சதம்) அழித்து விடும். செடிகளுக்கு இடையே உள்ள களைகளை (20-25 சதம்) மிகக் குறைவான ஆள்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.  . நன்கு வளர்ந்த பயிர்களுக்கு இடையே இக் களை கருவியைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால், விதைத்த 30-35 நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.








அறுவடை



ஆரம்பகட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்றது. மேலும் அதிகமாக வாடகை வசூலிக்கப்பட்டது. அதனால்   மேலவளவு  செல்லிக்கண்மாய் மற்றும் குஞ்சுங்கறந்தான் குள வயல்களில் திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யப்பட 30 ஏக்கருக்கும் மேற்பட்ட  வயல்களில்  வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரம் மூலம்  அறுவடை செய்யப்பட்டது.

குறு சிறு விவசாயிகளால் நேரிடையாக தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை கதிர் அறுவடை இயந்திரம் அழைத்து வரமுடியாத சூழ்நிலையில் கூட்டு பண்ணையம் மூலம் வரவழைத்து குறு சிறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அறுவடை செய்யப்பட்டது.


விற்பனை -அரசு நேரடி கொள்முதல் நிலையம்


இரண்டாவது வருடமாக மேலவளவில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - மதுரை மாவட்டம் சார்பாக வேளாண் துறை உதவியுடன்  அமைத்து அனைத்து விவசாயிகளும் பயனடைந்தனர் 

மொத்தம் 14887 மூடைகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்காக ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 174 விவசாயிகள் பயனடைந்தனர். அவற்றுள்  162 குறு/சிறு விவசாயிகள் அடங்குவர்.   

விவசாயிகள்  வெளி சந்தை மற்றும் இடை தரகர்களை தவிர்த்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 35 லிருந்து 40 லட்சம் வரை குறு சிறு விவசாயிகளின் பணத்தை வெளிச்சந்தை மற்றும் இடை தரகர்களிடம் செல்வதை தவிர்த்து விவசாயிகளிடமே சென்றடைய  கூட்டுபண்ணையம் வழிவகை செய்துள்ளது.



வேலை வாய்ப்பு

இந்த இரண்டு மாதங்களில் நமது கிராமத்தில்  20லிருந்து 30 நபர்கள் வரை முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களாக மேலவளவில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வேலை செய்துள்ளனர்.  இதன் மூலம் சம்பளமாக  ரூபாய் 3 லட்சம் வரை பெற்றுள்ளனர்.