இரசாயன உர மற்றும் பூச்சி கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு நஞ்சில்லா கிராமமே எங்கள் இலக்கு என்ற விழிப்புணர்வு முகாம் மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு , மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் மற்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழக வேளாண் இளநிலை பட்டதாரி கல்லூரி மாணவிகள் ஆகியோர் இணைந்து மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற செயலாளர் முன்னிலையில் பெரிய ஊரணியில் நடைபெற்றது. நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட வேளாண் மகளிர்கள் கலந்துகொண்டனர்.
மேலவளவு சுற்று கிராமங்களில் நெல், பருத்தி , கடலை, வாழை மற்றும் தென்னை பிரதான பயிர்களாகும். விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி ஆகியவற்றில் விவசாயிகள் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. ஆகையால் பயிர்களில் நெல் பழ நோய், வாடல் நோய், வேரழுகல் , தண்டழுகல் தாக்கம் பரவலாக தென்படுகிறது.. இவை 30லிருந்து 80 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
சாகுபடி துவங்கும்போது விதை மற்றும் மண் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு. மேலும் நோய் தாக்குதலின் போது பரவலாக ரசாயன பயன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். அவை விரைவில் செயல் இழந்து நோய் தாக்குதல் மீண்டும் அதிகரிக்கிறது. ஆகையால் ரசாயன பயன்பாடு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
நோயை கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன. மண் மலடாகிறது. மேலும் நன்மை செய்யும் நூண்ணுயிரிகளின் செயல்பாடு வெகுவாக குறைகிறது பயிர்களுக்கு கிடைக்கும் ஊட்டம் தடைபெறுகிறது மேலும் உற்பத்தி செலவினங்கள் அதிகரித்தும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
ஆகையால் விதை தேர்வு , விதை நேர்த்தி , உயிர் உரங்கள் , உயிர் எதிர் கொல்லி செயல்பாடு, பயிர் சுழற்சி முறை, மண் ஆய்வு, பசுந்தாள் உர பயன்பாடு , இயற்க்கை முறையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கல்லூரி மாணவிகள் மற்றும் உயிரியல் காரணிகள் உற்பத்தி மைய மகளிர்கள் விளக்கமளித்தனர். மேலும் நிகழ்வில் ஆர்வமாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது சிறப்பு. அவற்றிற்கு எளிய முறையில் விளக்கமளிக்கப்பட்டது
நிகழ்வின் இறுதியாக இரசாயனம் தவிர்ப்போம் மண் வளம் காப்போம் நஞ்சில்லா உணவு படைப்போம் எந்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



