ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.செல்வி ரமேஷ் அவர்களின் தலைமையில் முனைவர் திரு. இரா.அருண் குமார், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் அவர்களால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பாக நவீன குழித்தட்டு மற்றும் நிழல்வலை நாற்று வளர்ப்பு முறையில் நாற்றங்கால் பண்ணை துவங்கப்பட்டது. மேலவளவு பகுதிகளுக்கு ஏற்ற மிளகாய் ரகங்களை விவசாயிகளே கண்டறிய செயல் விளக்க திடல் அமைக்க மதுரை வேளாண் அறிவியல் நிலையம் வீரிய ஒட்டு மிளகாய் ரகங்களை (கோ.சி.எச்1, ஆர்கா ஹரிட்டா மற்றும் நடைமுறை சாகுபடி ரகமான ப்ரியங்கா) வழங்கியது.அவற்றின் நாற்றுகளை உற்பத்தி செய்து இன்று விவசாயிகளுக்கு வழங்கியது. இன்று முதல் நாற்றை சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தற்போது கத்தரி மற்றும் தக்காளி நாற்றுகள் தேவையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குழித்தட்டு சிறந்த முறை
நாம் உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாகவும் வீரியமுடனும், பூச்சி, நோய் தாக்குதல் இன்றி பேண வேண்டும். இதற்கு திறந்த வெளி நாற்று உற்பத்தியை அகலப்பாத்தி அல்லது மேட்டுப்பாத்தி மூலம் விதைத்தவாறு நிச்சயம் உற்பத்தி செய்யாது தவிர்த்தல் அவசியம்.
எத்தனை திட்டமிட்டு விதைகளை ஊன்றினாலும் நிச்சயம் விதைகள் முளைத்திட ஏற்ற சூழலை இதன் மூலம் ஏற்படுத்த வாய்ப்பு குறைவே. தனியாக விழுந்த விதைகள் மண்ணில் உள்ள நுண்கிருமிகள், வேர்ப்புழுக்கள், வண்டுகள் மூலம் பாதிக்கப்படுவதுடன் அதிகநீர் தேக்கம், அதிக வெயில் தாக்கம் மற்றும் வேகமாக வீசும் காற்றால் பாதிப்பு என வேறு பல காரணங்களாலும் நமக்கு தரமான நாற்றுக்கள் உரிய தருணத்தில் ஒரே சீராக சம உயரமாக நல்ல தண்டுப்பகுதி, அதிக சல்லி வேர்கள் நோய் தாக்காத இலைகள் கொண்டதாக கிடைக்காது.
நிழல்வலைகள் சூரியஒளியின் சூட்டை குறைத்து மட்டுப்படுத்திடும். தரமான நாற்றுக்கள் பெற 50 சதவீத நிழல் தரும் தன்மைக் கொண்ட பச்சை நிற வலைகள் சமவெளிப்பகுதிகளில் உதவுபவை.
நவீன குழித்தட்டு, நிழல் வலையில் வளர்க்கும் நாற்றுகளுக்கு வரவேற்பு
மகசூலை அதிகரிக்கும் நவீன குழித்தட்டு மற்றும் நிழல்வலை நாற்று வளர்ப்பு முறை விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது
வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க கரும்பு, சாமந்தி, கத்தரி, சவுக்கு, முருங்கை, மிளகாய், துவரை, தக்காளி உள்ளிட்ட வேளாண், தோட்டக்கலை, மலரியல் பயிர்களின் வீரிய ரகங்கள் அடிக்கடி அறிமுகப் படுத்தப்படுகின்றன. அதிக மகசூல் தரும் வீரிய ரக விதைகள் ஆயிரக்கணக்கில் (மிளகாய் நாற்று ஒரு கிலோ 35 ஆயிரம் ரூபாய்) விற்கிறது. இதை, நேரடியாக நிலத்தில் நாற்று விட்டால் பூச்சி, நோய் தாக்குகிறது. மேலும், நாற்று பிடுங்கும்போது சேதம் ஏற்படுகிறது. இதனால், மகசூல் குறைகிறது. இதைத் தவிர்க்க, குழித்தட்டில் நாற்றுகள் விடப்படுகின்றன.
நமது பண்ணைகளில் 98 குழிகள் கொண்ட குழித்தட்டில் தேங்காய்நார்க் கழிவுகளை நிரப்பி, வீரிய ரக விதைகளை ஊன்றி, நிழல் வலைகளில் வைக்கின்றனர். மிதமான வெப்பம், அளவான ஈரப்பதம், மென்மையான தேங்காய்நார்க் கழிவு உள்ளிட்டவைகளால் விதைகள் பழுதின்றி எளிதில் முளைக்கிறது.நிழல் வலையில் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய் தாக்குதலின்றி தரமான நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குழுவின் நோக்கம்
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அனைத்து பயிர்களின் நாற்றுகளை நவீன தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து நமது பகுதி விவசாயிகளிடம் தரமான நாற்றுகளை குறைவான அல்லது மானிய விலைகளில் கொண்டு சேர்ப்பது மற்றும் மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது குழுவின் நோக்கமாகும்
விதை பண்ணைக்கான குழுவின் பயணம்
விதை பண்ணையை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோடை கால பயிற்சியில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றிய முகாமில் நமது குழுவிலிருந்து சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ராஜேஷ் கண்ணா கடந்த கோடை காலத்தில் பயிற்சி பெற்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , மதுரையின் மூலம் நடத்திய ஒரு மத கால skill training program ல் தேனீ வளர்ப்பு மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு பயிற்சியை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் ரதிஷ் பெற்றுள்ளனர் . அதற்க்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமாக வழங்கப்பட்டது.
தற்போது தோட்டக்கலையின் தொழில் பழகுநர் ஓராண்டு பயிற்சி திட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பயிற்சியில் உள்ளனர்.


















