Tuesday, 24 November 2020

திருந்திய நெல் சாகுபடி சதுர நடவு முறையில் கோனோ வீடேர்


திருந்திய நெல் சாகுபடி சதுர நடவு முறையில் நடவு செய்யப்பட வயலில் கோனோ வீடேர் இருபக்கங்களிலும் ஓட்டப்பட்டன.

இடம் : மேலவளவு வேப்பனேரி குளம்

Monday, 9 November 2020

தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் நெற்பயிரில் இயந்திரமயமாக்கல் பற்றி செயல் விளக்கம்

.

9/11/2020, தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் மதுரை விவசாயக் கல்லூரி சார்பில் மேலவளவு கிராமத்தில் நெற்பயிரில் இயந்திரமயமாக்கல் பற்றி செயல் விளக்கம் நடைபெற்றது

நெற்பயிரில் இயந்திரங்களின் பயன்பாடு பற்றி உதவிப் பேராசிரியர் இ. சுப்பிரமணியன் அவர்களும் ஒருங்கிணைந்த இயந்திர அறுவடைக்கான நெல் மற்றும் பயிறு வகை ரகங்கள் பற்றி உதவிப் பேராசிரியர் க.தங்கராஜ் அவர்களும் விளக்கமளித்தனர். கருவிகளின் செயல்விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் இரா தமிழ்செல்வன் மற்றும் செ.ஆதித்யன் அவர்களும் வழங்கினார் 

குறிப்பாக இந்த செயல்விளக்கம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு மதுரை விவசாயக்கல்லூரி உழவியல் துறை சார்பில் நடத்தப்பட்டது 

தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் உயிர் உரம் (அசோஸ்பைரில்லம்) மற்றும் வேப்பெண்ணை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இடுபொருளாக வழங்கப்பட்டது 









       


உலக வங்கி உதவி திட்டம் மாநில ஆலோசகர் மேலவளவில் ஆய்வு


04/11/2020, மேலவளவில் உலக வங்கி உதவி திட்டம் மாநில ஆலோசகர் ஷாஜகான் (Chennai IAMWARM MDPU Agri Consultant) அவர்கள் ஆய்வு செய்தார். நிகழ்வில் சுப்புராஜ் (மதுரை வேளாண்மை துணை இயக்குநர்) அவர்கள் , மதுரைசாமி (கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர்) அவர்கள், தனசேகரன் (துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை துறை) அவர்கள் ,  அபிநயா அவர்கள் (AO - JDA Office IAMWARM) , பாலசுப்ரமணியன் அவர்கள் (வேளாண் உதவி அலுவலர்), தவப்பிரியா  அவர்கள் (வேளாண் உதவி அலுவலர்) உடனிருந்தனர்.

மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்திமையம், உழவர் உற்பத்தியாளர் குழு,  திருந்திய நெல் சாகுபடி நடவுப்பணிகளை  ஆய்வு செய்தார்.

நிகழ்வில் மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்திமையம் தயாரித்துவரும் டிரைக்கோடெர்மா விரிடி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது








Friday, 11 September 2020

AUG 2020 - மேலவளவில் சோலார் விளக்குப் பொறி செயல்விளக்கம்

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலவளவில் இயற்க்கை முறையில் பூச்சி மேலாண்மை குறித்த செயல்விளக்கம் சோலார் விளக்குப் பொறி கொண்டு  உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே நடைபெற்றது.

.சோலார் சோலார் விளக்குப் பொறியில், வேப்ப எண்ணெய் மற்றும் சோப்பு கரைசலை ஊற்றி வைத்து விட்டால், இரவில் நீலநிற வண்ணத்தில் எரியும் விளக்கு வெளிச்சம், பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகள், விளக்கு வெளிச்சத்தை நோக்கி வந்து கரைசலில் விழுந்து அழியும்.

ரசாயன மருந்தினை தவிர்த்து, சோலார் விளக்குப் பொறியை  பயன்படுத்தும்போது நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுகின்றன.






SEP 2020 - மேலவளவில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி குறித்த பயிற்சி



இன்று மேலவளவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக நேரடி நெல் விதிப்பு சாகுபடி குறித்த பயிற்சி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்ச்சியில் முனைவர் R.விஜயலட்சுமி (உழவியல் துறை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்) ,முனைவர்  கு.செல்வராணி ( உதவி பேராசிரியர் , வேளாண் விரிவாக்கம்) , முனைவர் சி.மேனகா (உதவி பேராசிரியர்,விதை நுட்பவியல்) ஆகியோர் கலந்துகொண்டனர்

 முனைவர் கு.செல்வராணி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி கூறியதாவது, நேரடி நெல்விதைப்பு கருவியின் மூலம்  நெல்விதைப்பின் முக்கியத்துவம், விதை தேவை மற்றும் பராமரிப்பு,  நிலம் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு, விதைப்பு  மற்றும் சாகுபடி குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு விளக்கினார்.

முனைவர்.விஜயலட்சுமி அவர்கள்  கூறியதாவது,  விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி  ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் விதைப்பின் மூலம்  நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர்  சேமிக்க முடிகிறது.

நேரடி நெல் விதைப்புக் கருவி பயன்படுத்துவதன் காரணமாக நாற்று  பறிப்பது, நாற்றங்கால் நடவு செய்வது இதற்காக ஆகும் ஆட்கூலி போன்றவை இல்லாமல் மிகவும் குறைகிறது.

நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் விதைப்பதால்  25 முதல் 40% வரை விதையின் தேவையான  அளவு குறைகிறது.

மேலும் நேரடி நெல்விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி மற்றும் நடைமுறையில் உள்ள சாதாரண நெல் நடவு குறித்த வேறுபாடுகளையும் விவசாயிகளுக்கு விளக்கினார்.      

முனைவர் சி.மேனகா அவர்கள் கூறியதாவது, விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி குறித்த அவசியத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் முக கவசத்துடம் சமூக இடைவெளியில் கலந்துகொண்டனர்.

 

JUN 2020 - மேலவளவில் பருத்தி இயந்திரம் மூலம் அறுவடை செயல்விளக்கம்

 

23/6/2020, மேலவளவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக பருத்தி, வெண்டை இயந்திரம் மூலம் அறுவடை, தோட்ட பயிர் நாற்று நாடாவுக்கான இயந்திரம் செயல்பாடு குறித்த நேரடி செயல்விளக்க வயல்வெளி பயிற்சி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்ச்சியில் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் இரா. அருண்குமார், தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ச.ஆரோக்கிய மெரி (மனையியல்), கொட்டாம்பட்டி உதவி வேளாண்மை  அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.


இன் நிகழ்ச்சியில் மேலவளவு, கச்சிராயன்பட்டி பகுதி பருத்தி, வெண்டை  சாகுபடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் விவசாயி செல்லம் பருத்தி தோட்டத்தில் பருத்தி அறுவடை இயந்திரம் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள்  கருவியை இயக்கி செயல்முறைகளை கற்றுக்கொண்டனர்.
இந்த கருவியை கொண்டு பருத்தி செடியிலிருந்து பஞ்சை  பிரித்தெடுத்து சேகரிக்க ஒருவரே போதுமானதாகும் இக்கருவியின் மூலம்  ஒரு நாளைக்கு ஒரு நபர் 10 முதல் 15 கிலோ வரை எடுக்கலாம். இவ்வாறு பிரித்தெடுக்கும் பருத்தியானது இலை, தழைகள் மற்றும் தூசியின்றி சுத்தமாக இருக்கும்.    இக்கருவியின் எடை குறைவாக இருப்பதால் பெண்களும் எளிதில் கையாள முடியும். அறுவடைக்கான செலவுகள் குறையும். மேலும் தற்போது ஆட்கள் பற்றாக்குறையுள்ள  சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக்கொண்டனர் .  
  
மேலும் வெண்டை அறுவடைக்கான கருவி ,  தோட்ட பயிர் நாற்று நாடாவுக்கான கருவி மற்றும் மானாவாரி தோட்டங்களில் உரம் இடும் கருவி ஆகியவை குறித்த செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும்  கிராம IPM IAMP மகளிர் குழு செய்திருந்தது.
 
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் முக கவசத்துடம் சமூக இடைவெளியில் கலந்துகொண்டனர்.



x

Sunday, 5 July 2020

மேலவளவு - கூட்டு பண்ணையம் - திருந்திய நெல் சாகுபடி 2019 #Melavalavu-collective-farming-SRI-paddy-cultivation#


அரசின் உதவியுடன்  விதை முதல் விற்பனை  வரை

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கீழ் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பட்டு வருகிறது.

200 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடிக்காக
  • கூட்டாக வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில்  விதை வாங்கி
  • கூட்டாக பாய் நாற்றங்கால் அமைத்து
  • கூட்டாக சாகுபடி குறித்த வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வயல்வெளி பயிற்சி 
  • கூட்டாக நடவு இயந்திரம்  மூலம் நடவு செய்து
  • கூட்டாக கோனோ வீடேர் வாங்கி களை எடுத்து
  •  கூட்டாக வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து
  • கூட்டாக  அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டது

தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் சாதாரண நடவில் அதிக தண்ணீர் தேவை, அதிக விதை, அதிக நாற்றங்கால் அளவு, பராமரிப்பு செலவு, நாற்று எடுத்தல், நடவு செலவு என உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது.

வரிசை நடவு இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடியில் ஆட்களின் தேவை மற்றும் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது.

மேலும்  கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் கூட்டாக விதை,  நாற்றங்கால், இடுபொருட்கள் வாங்குவதால் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது.          

மேலும் திருந்திய நெல் சாகுபடி மூலம் களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால் ஆட்செலவு குறைவு,பாசன நீர்த் தேவை 40 - 50 சதவீதம் குறைவு, அதிக வேர் வளர்ச்சி, அதிக கதிர்கள், அதிக மணிகள், அதிக தானிய மற்றும் வைக்கோல் மகசூல், எளிதான பூச்சி மேலாண்மை என பல நன்மைகள் உள்ளன.


திருந்திய நெல் சாகுபடி சம்பந்தமாக விவசாயிகளுக்கு பல கட்டங்களாக வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது  

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவின் நோக்கம் விவசாயிகளிடையே தற்போதைய நடைமுறையில் உள்ள அடர்  நடவு முறைக்கும் திருந்திய நெல் சாகுபடி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை சுய பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு வரும் காலங்களில் எது அவர்களுக்கு சரியானது என்பதை அவர்களே முடிவு செய்து வரும் காலங்களில் விவசாயிகள் பயில் செய்து  அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதே குழுவின் நோக்கமாகும்


பாய்  நாற்றங்கால் பணி


திருந்திய நெல் சாகுபடிக்கான பாய்  நாற்றங்கால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே கொட்டாம்பட்டி  வேளாண்மை உதவி இயக்குநர் திரு மதுரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேளாண் அலுவலர் திரு பாலசுப்ரமணியன், வயலக வானொலி கொட்டாம்பட்டி அமுதா ராணி, கவிதா,   பிரிய தர்ஷினி உடனிருந்தார்.  





அதிக மகசூல் மற்றும் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு கூட்டாக வேளாண்மைத் துறை டெப்போவிலிருந்து NLR  விதைவாங்கி பாய்  நாற்றங்கால்  அமைக்கப்பட்டது.

வயல்வெளி பயிற்சி

விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு  சம்பந்தமாக விவசாயிகளுக்கு வயல் வெளி பயிற்சி  வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டது 





வேளாண்மைத் துறை செயல் விளக்க திடலின் வெற்றி


கூட்டு சாகுபடி நோக்கத்திற்க்காக கடந்த ஜூன் மாதம் 2019 திருந்திய நெல் சாகுபடிக்காக எந்திரம் நடவுக்கு பாய் நாற்றங்கால் பயிற்சி  மற்றும் செயல் விளக்க திடல் திரு தெய்வேந்திரன் அவர்கள் வயலில் வேளாண்மைத் துறை  மூலம் அமைத்து குழு விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு தற்போது அதிகமாக விவாசியிகள்  திருந்திய நெல் செய்ய முன்வந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 



திருந்திய நெல் சாகுபடி நடவு



ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

களைகளினால் நெல் பயிரில் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. களைகள் பயிர்களோடு போட்டியிட்டு, பயிருக்குண்டான சத்துகள், நீர், சூரிய ஒளி, நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து பயிர் மகசூலைக் குறைக்கின்றன. களைகளினால் நடவு நெல், நேரடி நெல் விதைப்பு, மானாவாரி நெல் சாகுபடி முறைகளில் முறையே 34 முதல் 67 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


தட்பவெப்ப நிலை, மண்ணின் வகை, நெல் பயிரிடும் முறை, வகைகளின் குணம், ரகம், நீர் மேம்பாடு முறைகள் போன்ற காரணிகளினால் நெற்பயிரில் களைகளின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும்போது நெல் வயலில் புல் வகை களைகளான வர்சனாம் புல், குதிரை வாலி, இஞ்சி புல், கோரை வகை களைகளான வட்டக்கோரை, ஊசிக்கோரை, அகன்ற இலை களைகளான நீர்மேல் நெருப்பு, நீர்முள்ளி, வல்லாரை, நீர்ப்புள்ளி, நீர் கிராம்பு, அரைகீரை, நீர்த்தாமரை, பொடுதழை, கொடகுசால், கொட்டகரந்தி ஆகியவை நெல் பயிரில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சாகுபடி செய்யும் பயிர்களைக் காட்டிலும் விரைவாக வளர்வதற்கும், பரவுவதற்கும் களைகள் சிறப்புத் தன்மைகள் பெற்றுள்ளன. களைகளை அழிப்பது, ஒழிப்பது என்பது முடியாத செயலாகும். நல்ல மகசூல் பெற நடவு நெல் வயலில் நடவுசெய்த 30-ஆம் நாள் வரையிலும் களைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். 

களை நிர்வாகம் சம்பந்தமாக விவசாயிகளுக்கு வயல் வெளியில் செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும் விவசாயிகளின் களை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விவசாயிகளுக்கு சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கப்பட்டது


கோனோ  வீடர் 

களைகளைக் கட்டுப்படுத்த, களை எடுக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதால், கைக் களை எடுக்கும் செலவைக் காட்டிலும் குறைந்த செலவில் களைகளைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்க முடியும். இக் களைக் கருவிகளை நடவு நெல் விதைப்பு செய்த வயலில் வரிசைக்கு வரிசை இடைவெளியில் முன்னும், பின்னும் நகர்த்தி இயக்குவதால், களைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு, அதிக தூர்களும், கதிர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இக் களை கருவி வரிசையிலுள்ள களைகளை மட்டுமே (70-75 சதம்) அழித்து விடும். செடிகளுக்கு இடையே உள்ள களைகளை (20-25 சதம்) மிகக் குறைவான ஆள்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.  . நன்கு வளர்ந்த பயிர்களுக்கு இடையே இக் களை கருவியைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால், விதைத்த 30-35 நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.








அறுவடை



ஆரம்பகட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்றது. மேலும் அதிகமாக வாடகை வசூலிக்கப்பட்டது. அதனால்   மேலவளவு  செல்லிக்கண்மாய் மற்றும் குஞ்சுங்கறந்தான் குள வயல்களில் திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யப்பட 30 ஏக்கருக்கும் மேற்பட்ட  வயல்களில்  வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரம் மூலம்  அறுவடை செய்யப்பட்டது.

குறு சிறு விவசாயிகளால் நேரிடையாக தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை கதிர் அறுவடை இயந்திரம் அழைத்து வரமுடியாத சூழ்நிலையில் கூட்டு பண்ணையம் மூலம் வரவழைத்து குறு சிறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அறுவடை செய்யப்பட்டது.


விற்பனை -அரசு நேரடி கொள்முதல் நிலையம்


இரண்டாவது வருடமாக மேலவளவில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - மதுரை மாவட்டம் சார்பாக வேளாண் துறை உதவியுடன்  அமைத்து அனைத்து விவசாயிகளும் பயனடைந்தனர் 

மொத்தம் 14887 மூடைகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்காக ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 174 விவசாயிகள் பயனடைந்தனர். அவற்றுள்  162 குறு/சிறு விவசாயிகள் அடங்குவர்.   

விவசாயிகள்  வெளி சந்தை மற்றும் இடை தரகர்களை தவிர்த்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 35 லிருந்து 40 லட்சம் வரை குறு சிறு விவசாயிகளின் பணத்தை வெளிச்சந்தை மற்றும் இடை தரகர்களிடம் செல்வதை தவிர்த்து விவசாயிகளிடமே சென்றடைய  கூட்டுபண்ணையம் வழிவகை செய்துள்ளது.



வேலை வாய்ப்பு

இந்த இரண்டு மாதங்களில் நமது கிராமத்தில்  20லிருந்து 30 நபர்கள் வரை முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களாக மேலவளவில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வேலை செய்துள்ளனர்.  இதன் மூலம் சம்பளமாக  ரூபாய் 3 லட்சம் வரை பெற்றுள்ளனர்.


Wednesday, 22 April 2020

கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு Melavalavu-FPG-Govid19-activities



கொரோனா சமூக பரவலை தடுக்கும் பொருட்டு  3-4-2020 முதல் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக காய்கறிகளை மொத்தமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று லாப நோக்கமில்லாமல்  விற்பனை செய்து கொண்டு வருகிறது.

பொருட்கள் வேனில் பொதுமக்களின் வீட்டிற்கே கொண்டுபோய் விற்கப்படுகிறது. அறிவிப்புகள் வேனில் மைக் மூலம் செய்யப்பட்டு மக்களை  சமூக இடைவெளியை கடைப்பிடித்து  குழுவிற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் கொட்டாம்பட்டி அழகர்மலையான் சிறுதானியங்கள் மற்றும் இதர பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடமிருந்து மரச்செக்கு கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லண்ணை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு  பொதுமக்களின் வீட்டிற்கே கொண்டுபோய் விற்கப்படுகிறது.


முக கவசம் தயாரிப்பு
முக கவசம் தட்டுப்பாடாக உள்ள நிலையில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக மேலவளவு கிராம IPM IAMP குழு  மகளிர் உறுப்பினர்கள் தற்போது காட்டன் துணியால் முக கவசம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


மேலும் வார சந்தை, வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகளிடம்  சமூக இடைவெளியை கடைபிடிக்க குழுவின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.




மதுரை வாழை விவசாயிகள்
தற்போதைய சூழ்நிலையில் மதுரை மாவட்ட வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் விற்பனைக்காக தொடர்பை ஏற்படுத்தும் பொருட்டு "மதுரை வாழை விவசாயிகள்" என ஒரு வாட்ஸாப்ப் குருப்ப்பை துவக்கி அதில் மாவட்ட வாழை விவசாயிகள், மாவட்ட வாழைக்காய் கமிஷன் மண்டி, மாவட்ட வாழை இலை கமிஷன் மண்டி, வாழைக்காய் நேரடி வியாபாரிகள்  மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண் சந்தை அதிகாரிகள் ஒரு மையத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவால் இணைக்கப்பட்டு தற்போது தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.



தற்போதைய சூழ்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு  விவசாயிகள் இந்த குரூப்பில் தங்களுடைய வாழை தார்களின் நிலவரத்தை படங்களுடன் தெரிவிப்பதால் வியாபாரிகள் நேரடியாக தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது. மேலும் சில விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நேரடியான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விவசாயிகள் தங்களின் வாழை சாகுபடி குறித்த சந்தேகங்களையும் பதிவிட்டு  அதிகாரிகளின் ஆலோசனைனை பெற்றுவருகின்றனர்.

மேலும் வாழைகாய் கமிஷன் மண்டிகளில்  தற்போது வாழை தார்ரை  வைத்து  விலை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக எடை கணக்கில் விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு பயனளிக்குமா? போன்ற விவாதங்களும் நடைபெற்றன. 

மேலும் இந்த தளத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள வாழை சந்தைகளின் தினசரி விலை நிலவரங்களை நாம் தெரிந்துகொள்ள முயற்சிப்புப்போம்.

மாவட்டத்தில் உள்ள அணைத்து பகுதி  வாழை விவசாயிகள், வாழைகாய் மற்றும் இலை கமிஷன் மண்டி உரிமையாளர்கள், வாழை சார்ந்த தொழில் முனைவோர்  இணைவதற்கு அனைவரும்   உதவவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

****சமூக இடைவெளி மிகப்பெரிய கொரோனா தடுப்பு யுக்தியாகும்****
       
இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு