Thursday, 30 September 2021

மண் வளம் காக்க TN-IAMP திட்டத்தின் மூலம் உதவி #TN-IAMP#



மேலவளவு கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் நோயியல்  துறை உதவியிடம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும்  திட்டம் TN-IAMP Phase II உப்பார் நதி  உபவடி நிலப்பகுதி திட்டத்தின் மூலம் 300 ஏக்கருக்கும் மேலான தக்கைப் பூண்டு விதைகள் கிடைக்கப்பெற்று தற்போது பரவலாக விவசாயிகள் விதைத்து நெல் நடவு பணிகளுக்கு தயாராகி வருகின்றனர் 



குறிப்பாக குஞ்சுங்கறந்தான் குளத்தின் பாசனத்திற்கு உட்பட்ட  அனைத்து வயல்களிலும் விதைத்து தற்போது தக்கைப்பூண்டை மடக்கி உழவு செய்துவருகின்றனர்.

இதன் மூலம் மண்  வளம் மேம்பட்டு நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மகசூல் அதிகரிக்கும்,களைக்கான செலவீனங்கள்   குறையும் மற்றும் ரசாயன உரச்செலவு குறையும் என்பதை உணர்ந்து ஆர்வமாக விவசாயிகள் விதைத்து நெல் நடவு பணிகளுக்கு தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அதிக ரசாயன உர பயன்பாட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மண்வளத்தை மீட்டெடுக்க TN-IAMP திட்டம் விவசாயிகளுக்கு  பேருதவியாக இருக்கிறது . சென்ற வருடம் 250க்கும் மேற்பட்ட குருசிறு விவசாயிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


வேளாண்மை துறை மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் நோயியல்  துறைகளுக்கு விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு













Wednesday, 18 August 2021

வாழை சாகுபடியில் அடியுரமாக டிரைக்கோடெர்மா விரிடி பயன்பாடு - #banana-with-trichoderma-viride#

 


வாழை சாகுபடியில் வாடல் , கிழங்கு அழுகல் மற்றும் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த அடியுரமாக பயன்படுத்துவதற்கு விரிடி மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் கொண்டு மண் புழு உரம் மூலம் மதிப்புக்கூட்டி பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது. ஏக்கருக்கு 50 கிலோ பரிந்துரைக்கப்படுகிறது.
நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.
பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

50 கிலோ மூடை Rs . 1500/-

தொடர்புக்கு 8838547932.

உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்
மேலவளவு IPM கிராம குழு ,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்.
மதுரை மாவட்டம்

தென்னையில் டிரைக்கோடெர்மா விரிடி பயன்பாடு - #trichoderma-viride#





குருத்தழுகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய், இலைக்கருகல், இலைப்புள்ளி ஆகியவை தென்னையைத் தாக்கும் முக்கிய நோய்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன.ஆனால், உயிர் எதிர்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இத்தகைய தீங்குகள் ஏற்படுவதில்லை. இந்த முறையைக் கையாளும்போது சூடோமோனஸ் புளுரசன்ஸ்/பேசிலஸ் சப்டிலிஸ் என்ற நன்மை தரக்கூடிய பாக்டீரியாவும், டிரைக்கோடெர்மா விரிடி என்ற நன்மை தரக்கூடிய பூஞ்சாணமும் சிறப்பாகச் செயல்பட்டு தென்னையைத் தாக்கும் பல நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் இவை நீடித்த நன்மை தருவதோடு, தென்னை மரத்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றன.ஆண்டுக்கு 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 50 கிலோ மக்கிய சாண எருவுடன், 200 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ் பொடியை கலந்து மண்ணில் இடுவதால் குருத்தழுகல், இலைக்கருகல் ஆகிய நோய்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
ஒரு மரத்திற்கு 100 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ், 100 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 10 கிலோ தொழுவுரம் ஆகியவற்றை கலந்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மண்ணில் இடுவதால் தஞ்சாவூர் வாடல் நோய், சாறு வடிதல் நோய் ஆகியவை தாக்காமல் தென்னை மரத்தைப் பாதுகாக்கலாம்.
நன்மைகள்:
டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

ஒரு கிலோ 135/-.
தொடர்புக்கு 8838547932.

உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்
மேலவளவு IPM கிராம குழு ,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்.
மதுரை மாவட்டம்

Tuesday, 17 August 2021

புழுதியில் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் விதைப்பு #Direct-paddy-sowing#


மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு, நெல் சாகுபடியில் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு மதுரை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை துறை உதவிகளுடன் தொழில்நுட்ப பயிற்சிகள் பெற்று கடந்த ஒரு வருடங்களாக மேலூர் பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விதை மற்றும் குறைந்த செலவில் நேரடி நெல் விதைப்பு செய்து வருகிறது.


புழுதியில் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் விதைப்பு 

கடந்த கோடை பருவத்தில் மேலூர் பகுதி பல்வேறு கிராமங்களில் 75 ஏக்கரில் மாதிரி திடலாக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

9/8/2021 சூரக்குண்டு கல்லம்பட்டியில் இயற்க்கை விவசாயி தியாகராஜன் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் மூன்று ஏக்கரில் கருப்பு கவுனி நெல் கொடுக்கப்பட்டது.

புழுதியில் நேரடி நெல்விதைப்புக்காக நெல் விதைக்கும் கருவியில் கொழு போன்ற பட்டை இணைக்கப்பட்டுள்ளது. அவை மண்ணில் விழும் விதைகளை மூடிவிடுகின்றன.

நேரடி நெல் விதைப்பு

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு நெல் சாகுபடியில் செலவினங்களை குறைத்து மகசூலை அதிகப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு உதவிவருகிறது.

விதைத்து 9வது நாள்  

நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் வரிசை முறையில் நெல் விதைப்பு, கோனோவீடர் கொண்டு களை எடுப்பு போன்ற பணிகளுக்கு குழுவிலிருந்து மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு தேவைப்படும் ஆட்களை அனுப்பி உதவிவருகிறது.

விதைத்து 23வது நாள் கோனோவீடர் கொண்டு களை எடுப்பு பணி

நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் நெல்லை நேரடியாக விதைப்பதால் விதை தேவைப்படும்  மொத்த அளவில் 60முதல் 75% வரை விதையின் அளவு குறைகிறது.

நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் மூலம்  நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர் சேமிப்பு மொத்த பரப்பளவில் 15 முதல் 30 சதவீதம் வரை நமக்கு சேமிக்க முடிகிறது.

இந்த விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி  ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.


ஒரே நாளில் இரண்டு பேர் சேர்ந்து இரண்டரை ஏக்கர் வரை நெல்  விதைப்பு செய்ய முடியும். இதன் மூலம் ஆட்களின் கூலி அதிகம் மிச்சப்படுத்த முடியும். தற்போது விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 1000த்திற்கும் குறைவாகவே செலவாகிறது. இதன்முலம் விவசாயிகள் ஏக்கருக்கு 6000 முதல் 9000 வரை மிச்சமாகிறது.

விதைக்கப்பட்ட ஒவ்வொரு வயல்வெளிக்கும் குழு  நேரடியாக   சென்று பயிர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான அலையோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது

விதைக்கப்பட்ட ஒவ்வொரு நிலமும் அந்தந்த கிராமத்தில் மாதிரி செயல்விளக்க திடலாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விவசாயிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வரும் பருவத்தில் அதிக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம்.

தினமலர் நாளிதழ் செய்தி 




Tuesday, 13 April 2021

வாழையில் வைக்கோல் மூடாக்கு #helps-to-save-water#



மேலவளவு, நீர் சேமிப்பு, களைக் கட்டுப்பாடு மற்றும் களை சார்ந்த செலவீனங்கள் குறைப்பு , மற்றும் மண் வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வைக்கோல் கொண்டு மண் மேற்பரப்பில் பரப்பி தாள் மூடாக்கு செய்யப்பட்டுள்ளது.

மூடாக்கு மண் காற்று நுண்ணுயிர்கள் மற்றும் பயிர் இவற்றிற்கு ஒத்திசைவான நுண்சூழலை உருவாக்குகிறது. வைக்கோல் மூடாக்கு நீர் ஆவியாவதை தடுத்து நிலத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. மேலும் களை செடிகளை கட்டுபடுத்துகிறது. இதன் மூலம் களை கட்டுப்பாடுக்கான செலவினங்கள் குறைகிறது. நிலத்தின் மேற்பகுதி  எப்பொழுதும் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் செயல்பாடுகள் அதிகமாகின்றன. மண்புழுக்களும், நுண்உயிரிகளும் அதிகஅளவில்  பெருகுகின்றன. 

மூடாக்கு மட்கி மட்கு பயிருக்கு சிறந்த உரமாகிறது, மூடாக்கினால் உருவான மட்கு பெரும்பாலான நுண்ணூட்டங்களைப் பெற்றுள்ளது, மண்ணை பெருமழை, வெப்பம், பனியில் இருந்து பாதுகாக்கிறது, மழை நீரில் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. வெப்பத்தில் நுண்ணுயிர்கள் இறந்து போகாமல் பாதுகாக்கிறது. அதிக பனியில் நுண்ணுயிர்கள் செயலற்ற நிலைக்கு செல்வதிலிருந்து பாதுகாக்கிறது.

மூடாக்குடன் வாழைக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. 

சொட்டு நீர் பாசனத்தால் 50 சதவீதம் வரை நீர்,உரம், மின் சக்தி மற்றும் வேலையாட்கள் கூலி சேமிக்கப்படுகிறது . பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல், 30 சதவீதத்திற்கும் மேல்  அதிகமாகிறது.

சரியான அளவு நீரினை சீரான இடைவெளியில் பயிரின் வேர் மண்டலத்திற்கு அருகிலேயே அதன் தேவைக்கேற்ப அளிக்க முடிகிறது. நீர் வயல் முழுவதுமின்றி பயிருக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. மண்ணின் ஈரப்பதமானது எப்போதும் தோட்ட அளவுக்கு ஏற்றவாறு அளிக்கப்படுகின்றது. இதனால் பயிரானது சீராகவும், விரைவாகவும் வளர்கின்றது.

வாழை  சாகுபடியில் தற்போது வாடல் நோயால் அதிக பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது.வாடல்  நோய் அதிகளவில் வாழை தோட்டத்தில் நீர் பாய்ச்சும் பொது பாதிக்கப்பட்ட வாழையிலிருந்து பிற வாழைகளுக்கு பரவுகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சும் பொது பெருமளவில் நீரினால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது . 

வாழை தோட்டத்தில் நேரடியாக அதிக அளவு நீர் பாய்ச்சும் பொது அழுத்தத்தால் வாழைக்கு வைக்கப்பட்ட உரங்கள் நிலத்தின் ஆழத்திற்கு கடத்தப்பட்டு பெருமளவு உரங்கள் வீணாகின்றன . சொட்டுநீர் மூலம் பாய்ச்சுவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உரங்கள் முழுமையும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் கிடைக்கின்றன




ஊட்டமேற்றிய மண்புழு உரம்

 


மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் தரமான மண் புழு உரத்தில் அனைத்து வகையான பேரூட்ட மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டமேற்றி இன்று விற்பனையை துவக்கியுள்ளது.

இந்த உரத்தில் அனைத்துவகையான சத்துக்களும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தென்னை, பழ வகைகள் மற்றும் மாடித் தோட்டங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தில் அனைத்து வகையான உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சண கொல்லிகள் , பஞ்ச காவியா , பயன்மிகு நுண்ணுயிரிகள் மற்றும் வேப்பம்புண்ணாக்கு கொண்டு சரியான அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் இயற்கை உரங்களை உற்பத்தி செய்துவருகிறது.தற்போது அதிக ரசாயன உரங்கள் பயன்பாட்டால் விளைநிலங்கள் மலடாகி மகசூலிழப்பை சந்தித்து வருகின்றன. ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஊட்டமேற்றிய மண் புழு உரம் தயாரித்து விற்பனையை துவக்கியுள்ளது
நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி வட்டார உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்