Monday, 23 September 2019

மேலவளவில் நவீன தொழில்நுட்ப நாற்றங்கால் பண்ணை plant nurseries in melavalavu





ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று மதுரை வேளாண் அறிவியல் நிலையம்  திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.செல்வி ரமேஷ் அவர்களின் தலைமையில் முனைவர் திரு. இரா.அருண் குமார், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் அவர்களால்  மேலவளவு   உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பாக நவீன குழித்தட்டு மற்றும் நிழல்வலை நாற்று வளர்ப்பு முறையில்  நாற்றங்கால் பண்ணை துவங்கப்பட்டது.

மேலவளவு பகுதிகளுக்கு ஏற்ற மிளகாய் ரகங்களை விவசாயிகளே  கண்டறிய செயல் விளக்க திடல் அமைக்க மதுரை வேளாண் அறிவியல் நிலையம்  வீரிய ஒட்டு  மிளகாய் ரகங்களை  (கோ.சி.எச்1, ஆர்கா ஹரிட்டா மற்றும் நடைமுறை சாகுபடி ரகமான ப்ரியங்கா) வழங்கியது.அவற்றின் நாற்றுகளை உற்பத்தி செய்து இன்று விவசாயிகளுக்கு வழங்கியது. இன்று முதல் நாற்றை சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தற்போது கத்தரி மற்றும்  தக்காளி நாற்றுகள் தேவையென   விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குழித்தட்டு சிறந்த முறை


 
நாம் உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாகவும் வீரியமுடனும், பூச்சி, நோய் தாக்குதல் இன்றி பேண வேண்டும். இதற்கு திறந்த வெளி நாற்று உற்பத்தியை அகலப்பாத்தி அல்லது மேட்டுப்பாத்தி மூலம் விதைத்தவாறு நிச்சயம் உற்பத்தி செய்யாது தவிர்த்தல் அவசியம்.

எத்தனை திட்டமிட்டு விதைகளை ஊன்றினாலும் நிச்சயம் விதைகள் முளைத்திட ஏற்ற சூழலை இதன் மூலம் ஏற்படுத்த வாய்ப்பு குறைவே. தனியாக விழுந்த விதைகள் மண்ணில் உள்ள நுண்கிருமிகள், வேர்ப்புழுக்கள், வண்டுகள் மூலம் பாதிக்கப்படுவதுடன் அதிகநீர் தேக்கம், அதிக வெயில் தாக்கம் மற்றும் வேகமாக வீசும் காற்றால் பாதிப்பு என வேறு பல காரணங்களாலும் நமக்கு தரமான நாற்றுக்கள் உரிய தருணத்தில் ஒரே சீராக சம உயரமாக நல்ல தண்டுப்பகுதி, அதிக சல்லி வேர்கள் நோய் தாக்காத இலைகள் கொண்டதாக கிடைக்காது.

நிழல்வலைகள் சூரியஒளியின் சூட்டை குறைத்து மட்டுப்படுத்திடும். தரமான நாற்றுக்கள் பெற 50 சதவீத நிழல் தரும் தன்மைக் கொண்ட பச்சை நிற வலைகள் சமவெளிப்பகுதிகளில் உதவுபவை.

நவீன குழித்தட்டு, நிழல் வலையில் வளர்க்கும் நாற்றுகளுக்கு வரவேற்பு
மகசூலை அதிகரிக்கும் நவீன குழித்தட்டு மற்றும் நிழல்வலை நாற்று வளர்ப்பு முறை விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது

வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க கரும்பு, சாமந்தி, கத்தரி, சவுக்கு, முருங்கை, மிளகாய், துவரை, தக்காளி  உள்ளிட்ட வேளாண், தோட்டக்கலை, மலரியல் பயிர்களின் வீரிய ரகங்கள் அடிக்கடி அறிமுகப் படுத்தப்படுகின்றன. அதிக மகசூல் தரும் வீரிய ரக விதைகள் ஆயிரக்கணக்கில் (மிளகாய் நாற்று ஒரு கிலோ 35 ஆயிரம் ரூபாய்) விற்கிறது. இதை, நேரடியாக நிலத்தில் நாற்று விட்டால் பூச்சி, நோய் தாக்குகிறது. மேலும், நாற்று பிடுங்கும்போது சேதம் ஏற்படுகிறது. இதனால், மகசூல் குறைகிறது. இதைத் தவிர்க்க, குழித்தட்டில் நாற்றுகள் விடப்படுகின்றன.

நமது பண்ணைகளில் 98 குழிகள் கொண்ட குழித்தட்டில் தேங்காய்நார்க் கழிவுகளை நிரப்பி, வீரிய ரக விதைகளை ஊன்றி, நிழல் வலைகளில் வைக்கின்றனர். மிதமான வெப்பம், அளவான ஈரப்பதம், மென்மையான தேங்காய்நார்க் கழிவு உள்ளிட்டவைகளால் விதைகள் பழுதின்றி எளிதில் முளைக்கிறது.நிழல் வலையில் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய் தாக்குதலின்றி தரமான நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

குழுவின் நோக்கம்



வேளாண்மை  மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அனைத்து பயிர்களின் நாற்றுகளை நவீன தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து நமது  பகுதி விவசாயிகளிடம் தரமான நாற்றுகளை குறைவான  அல்லது மானிய  விலைகளில் கொண்டு சேர்ப்பது மற்றும் மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது  குழுவின் நோக்கமாகும்

விதை பண்ணைக்கான குழுவின்  பயணம்
விதை பண்ணையை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோடை கால பயிற்சியில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றிய முகாமில்   நமது குழுவிலிருந்து   சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ராஜேஷ் கண்ணா  கடந்த கோடை காலத்தில் பயிற்சி பெற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , மதுரையின் மூலம் நடத்திய ஒரு மத கால skill training program  ல் தேனீ வளர்ப்பு மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு பயிற்சியை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் ரதிஷ்  பெற்றுள்ளனர் . அதற்க்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமாக வழங்கப்பட்டது.

தற்போது தோட்டக்கலையின்  தொழில் பழகுநர் ஓராண்டு பயிற்சி  திட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பயிற்சியில் உள்ளனர்.






Wednesday, 18 September 2019

சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு

 மேலவளவு 17/09/2019

சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும்  நிகழ்வு


மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு இன்று (17/09/2019) மேலவளவு மற்றும் குன்னராம்பட்டி கிராமங்களில் நடைபெற்றது.

 மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள்  முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் உஷா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று மேலவளவு ஒடுங்காண் குளத்தில் நடைபெற்ற  நிகழ்வில் ஒடுங்காண் குள பாசன தாரிகள் மற்றும்  மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் முதல் கன்றை நட தொடர்ந்து  முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் உஷா ராணி, ஒடுங்காண் குளம் பொறுப்பாளர் திரவிய பாண்டி ,  மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிதம்பரம் ஆகியோர் நடவு செய்தனர்.

தற்போது  ஒடுங்காண் குளம் பாசன தாரிகள் மற்றும்   தானம் வயலக அறக்கட்டளை உதவியுடன் விவசாயிகளால் குடிமராமத்து பணி சிறந்தமுறையில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மேலவளவு துணை மின் நிலைய கட்டு மான பணிகள் நிறைவடையும் தருவாயில்  பார்வையிட்டனர்




Thursday, 12 September 2019

தேசிய அளவிலான கால்நடை நோய் தடுப்பு, செயற்கை கருவூட்டல் முகாம் மற்றும் தூய்மையே சேவை இயக்கம் துவக்க விழா

 மேலவளவு, 11/09/2019

தேசிய அளவிலான கால்நடை நோய் தடுப்பு, செயற்கை கருவூட்டல்  முகாம் மற்றும் தூய்மையே சேவை இயக்கம் துவக்க விழா




நேற்று  (11/09/2019) தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை கருவூட்டல் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து இந்தியாவின் 687 மாவட்டங்களிலும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம்களை  தொடங்கினார்.

மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி வட்டாரம்  மேலவளவு கிராமம் வீரகாளி அம்மன் கோவில் திடலில்  மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தேசிய அளவிலான கோமாரி நோய், கருச்சிதைவு  நோய் தடுப்பு செயற்கை கருவூட்டல் முகாம்  தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு  மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு பெ.பெரியபுள்ளான் என்ற  செல்வம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் அவர்கள் முன்னிலையில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் கு.செல்வராணி, முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொட்டாம்பட்டி வேளாண்மை துறை சார்பாக  வேளாண்மை உதவி இயக்குனர் மதுரை சாமி, உதவி வேளாண்மை  அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கால்நடை துறை சார்பாக  மருத்துவர்கள் R.விவேக்குமார்,  B.ரமேஷ் , L.சிவகுமார் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் மற்றும் மேலவளவு பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

முகாமில் 430 செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்தும் 430 செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு தடுப்பூசியும்,  47  கால்நடைகளுக்கு சிகிச்சையும் 5 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல்  மொத்தம் 1002  கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.







Tuesday, 10 September 2019

மேலவளவில் விவசாயிகள் ஓய்வூதியம் திட்டம் பதிவு முகாம்

மேலவளவில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் பிரதமரின் மான் தன் யோஜனா திட்டம் பதிவு முகாம்

இடம் : வீரகாளி அம்மன் கோவில் திடல், மேலவளவு

தேதி :  11/09/2019 காலை 9 மணி முதல் 11 மணி வரை
 
 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இதற்கான பதிவு நாளை காலை 9 மணி முதல் மேலவளவு வீரகாளி அம்மன் கோவில் திடலில் நடைபெறும்

 
தேவையான ஆவணங்கள்
 
1. ஆதார் அட்டை (பிறந்த தேதி இருக்கவேண்டும் )
 
2.வாரிசு தரரின் ஆதார் அட்டை (பிறந்த தேதி இருக்கவேண்டும் )
 
3. வங்கி கணக்கு புத்தகம் 


இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

மேலவளவில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

இடம் : வீரகாளி அம்மன் கோவில் திடல், மேலவளவு

தேதி :  11/09/2019 காலை 8 மணி
மதுரை வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வருகைதரவுள்ளனர்

நிகழ்வுகள்
- ஆடு மாடுகள் பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு

- மழை காலங்களில் வரும் நோய்களிடமிருந்து ஆடு மாடுகளை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வு
 
- ஆடு மாடுகளுக்கு உன்னிக்கு மருந்து  வழங்கப்படும்

- ஆடுகளுக்கு மழை காலங்களில் வரும் நோய்களுக்கு தடுப்பூசி  போடப்படும்

- மாடுகளுக்கு சினை ஊசிகள் ( வீரியம் மிக்க தரமான மாடுகளிருந்து பெறப்பட்டவை)   போடப்படும்

அனைத்து விவசாயிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

Thursday, 5 September 2019

Sep 2019 - மேலவளவில் வேளாண் அறிவியல் நிலையம் வயல்வெளி ஆய்வு

04-09-2019

 
வாழை உற்பத்தியில் நுண்ணுட்ட சத்துக்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மேலவளவில் வேளாண் அறிவியல் நிலையம்  மூலம் செயல்விளக்க திடல் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே  அமைத்துள்ளனர்.

நேற்று திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் முனைவர் சீ.கிருஷ்ண குமார்  அவர்கள் மேலவளவில் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டு  வாழை செயல்விளக்க திடலை பார்வையிட்டார். கடந்த மாதம்  பனானா சக்தி (வாழை நுண்ணுட்டக் கலவை) பயன்பாடு குறித்து மேலவளவு  உழவர் உற்பத்தியாளர்  குழு விவசாயிகளுக்கு   நேரடி செயல்விளக்கமளித்திருந்தனர். அது குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.

மேலும் வாழையில் உரம், பூச்சி  மற்றும் நீர் மேலாண்மை பற்றிய கருத்துக்களை விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.


Tuesday, 27 August 2019

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு நாற்றங்கால் பண்ணை துவக்க விழா


ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு மேலவளவு   உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பாக  உறுப்பினராக உள்ள திரு ராஜேஷ் கண்ணா அவர்களின் தோட்டத்தில் நாற்றங்கால் பண்ணை முனைவர் திருமதி.செல்வி ரமேஷ்,திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் மதுரை அவர்களின் தலைமையில் முனைவர் திரு. இரா.அருண் குமார், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர்,வேளாண் அறிவியல் நிலையம் மதுரை அவர்களால் துவங்கப்பட்டது.

மேலவளவு சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள்  தற்போது தோட்ட பயிர்களான கத்தரி,தக்காளி மற்றும் மிளகாய்  நாற்றுக்களுக்கு ஓட்டன்ச்சத்திரம் மற்றும் ஆண்டிபட்டிக்கு நெடுந்தூரம் பயணம் செய்து நாற்றுகளை வாங்கிவருகின்றனர்.  மேலும் நெடுந்தூரம் மற்றும் வெப்பநிலை மாறுபாடு காரணங்களினால் நாற்றின் உயிர்  பிடிப்பு விகிதம் குறைவாக உள்ளது. 

குழுவின் நோக்கம் வேளாண்மை  மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அனைத்து பயிர்களின் நாற்றுகளை நவீன தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து எங்கள் பகுதி விவசாயிகளிடம் தரமான நாற்றுகளை குறைவான விலைகளில்  கொண்டு சேர்ப்பது மற்றும் மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது  குழுவின் நோக்கமாகும் 

அதன் பொருட்டு இன்று முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் முதல் மிளகாய் விதையை போட தொடர்ந்து குழு செயலாளர் சிதம்பரம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் குழு விவசாயிகள் அனைவரும் விதையை பாவி இனிதே தொடங்கப்பட்டது.


விதை பண்ணைக்கான குழுவின்  பயணம் 
விதை பண்ணையை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோடை கால பயிற்சியில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றிய முகாமில்   நமது குழுவிலிருந்து   சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ராஜேஷ் கண்ணா  கடந்த கோடை காலத்தில் பயிற்சி பெற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , மதுரையின் மூலம் நடத்திய ஒரு மத கால skill training program  ல் தேனீ வளர்ப்பு மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு பயிற்சியை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் ரதிஷ்  
பெற்றுள்ளனர் . 

அதற்க்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க இயக்குனர்  முனைவர் ம.ஜவகர்லால் அவர்களால் வழங்கப்பட்டது.


தற்போது தோட்டக்கலையின்  தொழில் பழகுநர் ஓராண்டு பயிற்சி  திட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பயிற்சியில் உள்ளனர்.  

இத்துடன் வேளாண்மை, தோட்டக்கலை,  வேளாண் அறிவியல் நிலையம்  உதவியுடன் மற்றும்   குழு மூத்த விவசாயிகளின் அனுபவங்களையும் மூலதனமாக கொண்டு இளம் விவசாயிகளாக ராஜேஷ் கண்ணா, பாண்டியராஜன் ,சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ரதிஷ் ஆகியோர் விதை பண்ணையை வழிநடத்துவார். 

தேவை 
விதை, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை   வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் அறிவியல் நிலயத்திடம் எதிர்நோக்கியுள்ளோம் 

உணவூட்டும் விவசாயிக்கு உயிரூட்டுவோம்



JUNE 2019 - கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

கொட்டாம்பட்டி  K உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

    கொட்டாம்பட்டி  K  உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் 7/6/2019, வெள்ளி கிழமை மாலை 4:00 மணியளவில்  மேலவளவு,  வீர காளி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்க்கு 82 உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



    
    இந்த குழு கூட்டத்தில்  கீழ் கண்ட வேளாண் அதிகாரிகள்  வருகை தந்து சிறப்பித்தனர்.
•    திரு விவேகானந்தன்,  துணை  இயக்குனர், நீர் மேலாண்மை மற்றும் கூட்டு பண்ணை திட்டம், மதுரை 
•    திரு மதுரை சாமி, உதவி இயக்குனர், வேளாண்மை துறை, கொட்டாம்பட்டி
•    திருமதி விமலா, வேளாண் அலுவலர்,  இணை  இயக்குனர் அலுவலகம், மதுரை.
•    திரு  தனசேகரன்,  துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை துறை.
•    திரு பாலசுப்ரமணியன், உதவி வேளாண் விரிவாக்க  அலுவலர் ,வேளாண்மை துறை.
•    திரு வினோத் கண்ணன் , உதவி தோட்டக்கலை விரிவாக்க  அலுவலர், தோட்டக்கலை துறை.
•    திரு பிரேம் குமார், மஹிந்திரா EPC  இண்டஸ்ட்ரீஸ் LTD , சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் .

    குழு தலைவர் திரு கே.மூக்கன் அவர்களின் வரவேற்பு உரையுடன் குழு கூட்டம் தொடங்கியது.  கொட்டாம்பட்டி  K  உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 
•    திருந்திய நெல் சாகுபடிக்கு களையெடுக்கும் இயந்திரம்
•    தொழி உழவுக்கு ரோட்டாவேட்டர்
•    மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம்
•    நெல், கடலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு விதைப்பண்ணை அமைத்தல்

        மேலும் குழு தலைவர் ஓராண்டு கால செயல்பாடுகளை எடுத்துரைத்தார்
அவைகள் பின்வருமாறு:-
•    5 உழவர் ஆர்வலர் குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுவை அமைத்தது
•    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திதின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது
•    சிறு/குறு விவசாயி சான்றுகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை மூலம் வழங்க உதவியது
•    காசா புயலால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்து சென்று  நிவாரணம் பெற்றுத்தந்தது
•    கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கியது.
•    துணை மின் நிலையம் கொண்டுவர உறுதுணையாக இருந்தது.
 
வேளாண் உதவி இயக்குனர்
 


    மேற்கூறிய கோரிக்கைகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் கீழ்கண்டவாறு விளக்கமளித்தார் :-
    களையெடுக்கும் இயந்திரம் .     திருந்திய நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் மானிய நிதியிலிருந்து ஒரு உழவர் ஆர்வலர் குழுவிற்கு 3 விதம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார்கள்
     ரோட்டாவேட்டர் மற்றும் ட்ரைலர். டிக் லோன் மூலமாக வழிவகை செய்யலாம் என்று விளக்கினார் .
    தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம். இது வாங்குவது சம்பந்தமாக வேளாண் அலுவலர்,  இணை இயக்குனர் அலுவலகம் மூலமாக ஏற்பாடுகள் செய்வதற்கும் அதற்க்கான வழிமுறைகளை தெரிந்துகொண்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி கூறினார்.
    விதைப்பண்ணை அமைத்தல். தற்போது நமது யூனியனில் விதை உற்பத்தி தேவைக்கு அதிகமாக உள்ளதால் மற்ற யூனியங்களுடன் தொடர்பு கொண்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி கூறினார். அதற்க்கு முன்பாக விதை பண்ணையத்திர்கு உரிய விவசாயிகளை தேர்வு செய்யுமாறு கூறினார்.
    குழுவிற்கு வாங்கப்பட்ட பண்ணை கருவிகளை குழுவிற்குள் குத்தகை விட்டு அதன் தொகையை வங்கி கணக்கில் வைக்குமாறு அறிவுரை கூறினார் . பண்ணைக்  கருவிகளை  பயன்படுத்துவது  மற்றும்  அதனை  நிர்வகிப்பது   ஆகியவற்றிக்கான  ஒப்பந்தத்தையும்  விரைவில்  தயார்  செய்யும்படி  அறிவுரை  கூறினார்.
    நமது குழுவின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக உள்ளதாகவும் மென்மேலும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார். மேலும் அவர்களது தரப்பில் எல்லா உதவிகளும் செய்துதரப்படும்  என்று உறுதியளித்தனர்.


வேளாண் அலுவலர் இணை  இயக்குனர் அலுவலகம், மதுரை

    விவசாயிகளின் ஒருங்கிணைப்பு, குழுவின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 


துணை  இயக்குனர், நீர் மேலாண்மை மற்றும் கூட்டு பண்ணை திட்டம்

    கூட்டு பண்ணையத்திட்டம் பற்றி மிக தெளிவாக விளக்கி அனைத்து விவசாயிகளையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள். எப்படியெல்லாம் குழுக்கள் வியாபார ரீதியாக செயல்பட்டு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக்கொள்ளலாம் என்று எடுத்துரைத்தார்கள். சொட்டு நீருக்கு டீலர்ஷிப் எடுப்பது, பால் பண்ணை வைப்பது, கண்மாய்களை தூர்வாருவது/ மராமத்து பார்ப்பது போன்ற பல செய்திகளை மிக அழகாக கூறினார். மேலும்  குழுவை அடுத்த கட்டத்திற்க்கு   கொண்டு செல்வதற்கும் அறிவுரை கூறினார்கள்.
 




உதவி வேளாண்/தோட்டக்கலை  விரிவாக்க  அலுவலர்கள்
    அவர்கள் விவசாயிகளின் தேவைகளை இனம்கண்டு அதற்க்கு எல்லாவிதமான உதவிகளையும் என்றும் செய்யத்தயார் என்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டினார்கள்.


சொட்டு நீர்/தெளிப்பு நீர் செயல் விளக்கம்
    திரு பிரேம் குமார், மஹிந்திரா EPC  இண்டஸ்ட்ரீஸ் LTD அவர்கள் தெளிப்பு நீர் செயல் விளக்கம் நேரடியாக வயலில் செய்துகாட்டினார்கள். நீர் மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்று விவசாயிகள் உள்வாங்கிக்கொண்டனர்.


உலக சுற்றுசூழல் தினம்
    நிறைவாக உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடவு செய்வதற்கு குழுவின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  துணை  இயக்குனர் அவர்கள் மர கண்டுநடவை  துவக்கிவைத்தார்கள்.
 



July 2019 - அசோலா வளர்ப்பு பயிற்சி மற்றும் பயிர் காப்பீட்டுத்திட்டம் விழிப்புணர்வு முகாம்

18/07/2019 அன்று  மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு  தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை   (ATMA)  திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி   மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துரையின்   பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் விழிப்புணர்வு முகாம் மதுரை சாமி ( உதவி இயக்குனர், வேளாண்மை துறை)  தலைமையில்  நடைபெற்றது.

இதில் பூச்சியியல் நிபுணர்  நீ செல்வம் ( வேளாண்மை உதவி இயக்குனர், பயிர் காப்பிட்டு திட்டம் , மதுரை),
 மதுரை சாமி ( உதவி இயக்குனர், வேளாண்மை துறை),
தனசேகரன் (துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை துறை),
பா.ராஜதுரை (கொட்டாம்பட்டி வட்டார தொழிநுட்ப மேலாளர்),
பிரியங்கா மற்றும் கண்ணன் , கொட்டாம்பட்டி வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

 ராஜதுரை அவர்கள் அசோலா வளர்ப்புக்கான செயல் விளக்க திடல் அமைத்து உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே நேரடி செயல் விளக்கமளித்தார். மேலும் கால்நடைகளுக்கு அசோலாவை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினர். விவசாயிகள் அசோலாவை வளர்க்கும்போது தீவனத்துக்கான செலவு குறைகிறது. 

பூச்சியியல் நிபுணர்  நீ செல்வம் அவர்கள்  பயிர் காப்பீட்டின் அவசியத்தை பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினர். மேலும் பயிர்களில் பூச்சி மேலாண்மை பற்றி நன்மை - தீமை செய்யும் பூச்சிகளை பற்றியும், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடைய பயிர். எடுத்துக்காட்டாக ஆமணக்கு,  மற்றும் செண்டுமல்லி உள்ளிட்டவை நன்மை செய்யும் பூச்சிகளை அதிகளவில் கவர்ந்து இழுப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சியை கட்டுப்படுத்த முடியும். பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரத்தை பயன்படுத்துவதைவிட, இணை மற்றும் துணை பயிர்களை வளர்த்து செலவின்றி இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளிடையே கலந்துரையாடியது சிறப்பம்சமாகும். 




Monday, 26 August 2019

May 2019 - சீரான மின்சாரம் வழங்க கோரி போராட்டம்

மேலவளவு பகுதிகளில் மின் பற்றாகுறை, விவசாயிகள் பரிதவிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக   மின் பலு (voltage) மிகவும் குறைவாக அதாவது 90 - 120 க்கும் குறைவாக உள்ளது. அதனால் குடிநீர், தெரு விளக்கு, வீட்டு விளக்குகள் , வீட்டு உபயோக மின் சாதனங்கள், கிணறுகளில் உள்ள முன் மோட்டார்கள் இயங்கவில்லை.

தற்போது  110/11 KV நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது

கிணறுகளில் தண்ணீர் இருந்தும் தென்னை, வாழை, பருத்தி  , எள், மாட்டு தீவன புள்  ,மற்றும் தோட்ட பயிர்கள்  போன்ற பயிர்களை காப்பாற்ற முடியாத அளவுக்கு விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

2013ல்  கடும் வறட்சியின் காரணமாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களில்  70% த்திற்கு மேல் உள்ள தென்னை, மா, கொய்யா, எலும்பிச்சை, முந்திரி மற்றும் பழ தோட்டங்களை இழந்துள்ளோம். அப்போது காப்பாற்றிய மரங்களை   தற்போது மின்சார பற்றாக்குறையால் தணண்ணீர் இருந்தும் இழக்கும் சூழலில் உள்ளோம்.

மழையும் பொய்த்து விட்டதால் பயிர்களை காப்பாற்ற முடியாத சூழலில் உள்ளோம்.

இது சம்பந்தமாக EB யில் பலமுறை நேரில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு, மேலவளவு சார்பாக அணுகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர்கள் குழு மற்றும் பொது மக்கள் சார்பாக மின் செயற்பொறியாளருக்கு  (மின் பகிர்மானம் தெற்க்கு, மேலூர்)  மனுவை நேரில் வழங்கியுள்ளோம். மேலும் இதன் நகலை 

1. உயர்திரு மேற்பார்வை பொறியாளர் அவர்கள் , மின் பகிர்மான கழகம், கே புதூர், மதுரை 

2. உயர்திரு வட்டாச்சியர் அவர்கள், மேலூர் 

3. உயர்திரு உதவி கண்காணிப்பாளர் அவர்கள், காவல் துறை, மேலூர் 

ஆகியோருக்கு நேரில் வழங்கியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக 22/05/2019 காலை 9 மணிக்கு விவசாயிகள் மேலூர் தெற்குப்பட்டி மின்சார அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி  உள்ளோம்.

மேலும் சீரான மின்சாரம் வழங்க கோரி உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் சுற்று வட்டார கிராம பொது மக்கள் சார்பாக 03/06/2018 அன்று காலை மேலவளவு பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடை பெற இருந்த நிலையில் 2/6/2019 மதியம் 2.30 மணியளவில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர், மின் செயற்பொறியாளர், மின் பொறியாளர், காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் 7 மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின் துறை அதிகாரிகள் மின் அழுத்தம் குறையாமல் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்தவாரம் நடைபெறும் பராமரிப்பின் பொழுது மின் கசிவுகள் தடுக்கப்பட்டு மேலும் மின் அழுத்தம் கூட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதனால் நாளை 3-6-2019 அன்று நடை பெற இருந்த சாலை மறியல் போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.

மேலவளவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் குறைவான மின்சாரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு  ஏற்பட்ட அவஸ்தைகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்க்கு எடுத்துச்செல்ல உதவிய அனைவருக்கும் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

மேலும் ஊடகத்தின் கவனத்தால் மேலவளவு துணை மின் நிலைய வேலைகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.